பார்வையாளர்கள்

Total Pageviews

Followers

Saturday 10 February 2024

வாழ்க்கைச் சறுக்கு

வீட்டில் இருந்த கடிகாரத்தில் இருந்து ஒரு குருவி ஐந்து முறை வெளியே வந்து எட்டிப்பார்த்துவிட்டு தனது இனிய குரலால், ”குக்கூ, குக்கூ, குக்கூ, குக்கூ, குக்கூ, குக்கூ” என்று கத்திவிட்டு, பறக்க முடியாமல் மீண்டும் அதன் கூட்டுக்குள்ளேயே சென்றுவிட்டது. என் ஒற்றைக்கையால் என் படுக்கையை அழுத்திக்கொண்டே மெதுவாக என் உடலை நிமித்தி கட்டிலில் அமர்ந்தேன். இடுப்புப் பகுதி முழுவதும் மிகவும் வலியும் வேதனையுமாக இருந்தது. எழுந்து நின்று அலுப்பு முறித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றினாலும், அப்படிச் செய்வதால் அது எனக்குப் பாதகமாக மாறிவிடும் என்பதை உணர்ந்து அவ்வாறு செய்யாமல் தவிர்த்தேன். 



ஒரு காலத்தில் கல்லூரி படிக்கட்டுகளை இரண்டிரண்டாகத் தாவிச் சென்ற அனுபவங்கள் என் கண் முன்னே வந்து என்னை வேதனைப்படுத்தின. திருமணத்தில் பெரிதளவில் விருப்பம் இல்லாமல் பட்டாம்பூச்சியாய் உலகைச் சுற்றிக்கொண்டு இருந்தேன். “வயதான காலத்தில் உன்னை யார் பார்த்துக்கொள்வார்? நாங்கள் இன்னும் கொஞ்சக் காலம் தான் இருப்போம், அதன் பிறகு நீ தனிமையில் தான் இருந்தாக வேண்டும்.” என்று அடிக்கடி அப்பா அம்மா வற்புறுத்தியதன் பெயரில் இணையேற்பும் இனிதே நிகழ்ந்தது. 

நாங்கள் இருவருமே ஒரே நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர்களாகப் பணியாற்றி வந்தோம். பார்ப்பவர்கள் அனைவரும் எங்களை ஜோடிப்புறாக்கள் என்றே அழைத்தனர். அந்த அளவுக்கு எங்களுடைய ஜோடிப்பொருத்தம் அருமையாக அமைந்திருந்தது. அப்படி அழகாகச் சென்றுகொண்டிருந்த என் வாழ்க்கையில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. 

நானும் என் இணையரும் இருசர்க்கர வாகனத்தில் கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தோம். எங்கிருந்தோ ஒரு இருசர்க்கர வாகனம் எங்களை முந்திக்கொண்டு செல்லவே, அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நான் அவர்களை முந்திச் செல்வதற்காக என் வாகனத்தை வேகமாக முடுக்கினேன். 

“சூர்யா! வேண்டாம்! நாம மெதுவாவே போவோம்!” என்று இணையர் என்னைத் தடுத்தபோதிலும், அந்த இடத்தில் என்னை ஒருவர் முந்திச்சென்று, அதன் மூலம் அவர் அடையும் மகிழ்ச்சி என்னைக் கேவலப்படுத்துவதாக உணர்ந்தேன். கண்ணிமைக்கும் நேரத்தில், என் வாகனம் முந்திச்சென்ற வாகனத்தைத் தாண்டிச் சென்றது. ஆனந்தக்களிப்பில் நான் என் இரண்டு கைகளையும் தூக்கி வானில் அசைத்துக் கொண்டாடினேன். அதன் பின் என்ன நிகழ்ந்தது என்பது எனக்கு நினைவு இல்லை. 

சில மாதங்கள் மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்திருக்கிறேன். அதில் இருந்து வெளியே வந்தபோது தான், என் இணையர் என்னை விவாகரத்து செய்துவிட்டதாகவும், என் இரண்டு கால்களும் இனி செயல்படாது என்பதும் எனக்குத் தெரியவந்தது. 

சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த என்னால் விலையுயர்ந்த சர்க்கர நாற்காலியை வாங்கச் சில காலம் எடுத்துக்கொள்ளும் என்பதால் என்னிடம் இருந்த சில பொருட்களை விற்று ஒரு சாதாரண சர்க்கர நாற்காலியை வாங்கினேன். இப்போது என் கைகளால் அருகில் இருந்த என் சர்க்கர நாற்காலியை மெல்ல பிடித்து, என் உடலைத் திருப்பி அதில் உட்கார முற்பட்டேன். எனக்கிருந்த மனவேதனையை மறந்தாலும், என் உடலை அதனுள் நானே வைக்கும் வலி மிகப்பெரியது. இதை உணரவேண்டும் என்றால், உங்கள் கால்களை மடக்கிக்கொண்டு அருகில் உள்ள நாற்காலியில் உங்கள் உடலைக் கொண்டுசென்று அமர்ந்துபாருங்கள். 

இந்நிலையில், கதிரவனின் வீடு ‘புதுமனைப்புகுவிழா’ அழைப்பிதழ் என் கண்ணில் பட்டது. கதிரவன் என் பால்யகால நண்பன். அவனுடைய வீட்டிற்குச் சென்றாலாவது யாராவது சில மனிதர்களை என்னால் காண முடியும். அப்பா அம்மா மறைந்து இப்போது 3 மாதங்கள் கடந்துவிட்டன. எனவே, எந்த மனிதர் சஞ்சாரமும் இல்லாமல் வீட்டில் தனியே அமர்ந்துகொண்டு நேரத்தைப் போக்கிக்கொண்டு இருக்கும் எனக்கு இது ஒரு ஆசுவாசமாக இருக்கும். 

ஒரு வாடகை வண்டியை ஏற்பாடு செய்து கதிரவனின் வீட்டின் முன் இறங்கினேன். வண்டி ஓட்டிய தம்பி என்னைச் சர்க்கர நாற்காலியில் அமர வைத்து உதவினான். ஒவ்வொரு முறை ஒரு இருக்கையில் இருந்து சர்க்கர நாற்காலிக்கு இடம்மாறும்போதும் சொல்ல முடியாத வேதனை என் இடுப்பில் ஏற்பட்டது. இது ஆயிரம் மின்னல்கள் என் எலும்பினுள் உட்புகுவதைப் போல இருந்தது. 

நல்ல வேளையாக வீட்டு வாசலில் செல்வதற்கு ஒரு சருக்கலான தளம் இருந்தது. அதில் என்னை சர்க்கர நாற்காலியில் வைத்து வாசல் வரை கொண்டுசென்றார்கள். ஆனால், வாசலில் இருந்து உள்ளே செல்வதற்கு இரண்டு பேர் என் சர்க்கர நாற்காலியைத் தூக்கி வைக்க வேண்டியது இருந்தது. தூக்கி வைத்த என் நண்பனுக்கும், மற்ற பிறருக்கும் நிச்சயம் சிரமமாக இருந்திருக்கும். 

அழகான வீடு, ஆனால் என்னால் வீட்டின் தரைதளத்தை மட்டும் தான் பார்க்க முடிந்தது. மேல் மாடிக்குச் செல்ல சறுக்கு இல்லை என்பதால் என்னால் அங்கு சென்று பார்க்க முடியவில்லை. “மாடி அருமையா இருக்கு!” என்று அங்கு சென்றவர்கள் கூறியவற்றைக் காதில் கேட்டேன். 

சிறிது நேரத்தில் அருமையான பிரியாணியும், சுவையான கூட்டும், இனிப்பும் வழங்கப்பட்டது. மகிழ்வோடு அவற்றைச் சாப்பிட்டபோது தான் அடுத்த சிக்கல் தொடங்கியது. வயிற்றினுள் கடுமையான வெப்பம். இது இயற்கையின் அழைப்பு. என் சர்க்கர நாற்காலியைச் சுழற்றிக்கொண்டு கழிவரை வாசல் வரை சென்றுவிட்டேன், ஆனால், கழிவரையினுள் செல்ல மீண்டும் யாரோ என்னைத் தூக்கிவிட வேண்டும். இங்கே சறுக்கு இல்லை. 

- ஜெயசீலன் சாமுவேல்

0 comments:

Post a Comment